கொட்டும் மழையில் குவிந்த மாணவ, மாணவியர்!
தினமலர் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.தென் சென்னையில் உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்காக, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி., வளாகத் தில் காலை 8 மணிக்கு 10ம் வகுப்பு ஸ்டேட் போர்டு மாணவ, மாணவியருக்கும், காலை 11 மணிக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு, மதியம் 2 மணிக்கு கலைப் பிரிவு மாணவ, மாணவியருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அதிகாலை 4.30 மணிமுதல் மாணவ, மாணவியர் எம்.ஐ.டி., அரங்கத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு மாணவர்களுக்காக எழுதிய ஜெயித்துக் காட்டுவோம் வழிகாட்டி புத்தகம், தேர்வுக்கு வரும் முக்கிய வினாக்கள் மற்றும் புளூ பிரின்ட் புத்தகம், மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாப்பது குறித்த ஹெல்த் புத்தகம், குறிப்பெடுக்கும் பேனா, நோட்டு புத்தகம் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.பத்தாம் வகுப்புக்கான நிகழ்ச்சியில், இந்து மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் ராஜகோபால், ஆங்கில ஆசிரியர் ஆனந்தன், கணித ஆசிரியர் கேசவன், அறிவியல் ஆசிரியர் ஆனந்தன், அமைந்தகரை மாநகராட்சி பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் யுவராஜ் ஆகியோர் பொதுத்தேர்வை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும், அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசனைகளை அள்ளி வழங்கினர்.காலை 11 மணிக்கு துவங்கிய பிளஸ் 2 அறிவியல் பிரிவிற்கான வகுப்பில் இந்து மேல்நிலைப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் கோபி ஆனந்தன், வேதியியல் ஆசிரியர் பாலசுப்ரமணியன், சூளை, ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியின் தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர் சேகர், இந்து மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் பத்மநாபன் ஆகியோர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண்களை குவிக்க ஆலோசனைகளை வழங்கினர்.மதியம் 2 மணிக்கு துவங்கிய பிளஸ் 2 கலைப்பிரிவு நிகழ்ச்சியில் இந்து மேல்நிலைப் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் சீனிவாசன், முத்தையால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் பொருளியல் ஆசிரியர் ரவி, இந்து மேல்நிலைப் பள்ளியின் கணக்கு பதிவியல் ஆசிரியர் ஸ்ரீராமன் ஆகியோர் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவது எப்படி என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கினர்.புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி, பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜு மேற்பார்வையில், சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பணியில் இருந்தனர். தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப் பட்டிருந்தன. ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மழை அவ்வப் போது வந்து மிரட்டிய நிலையிலும், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மழையை மிஞ்சிய ஆலோசனைகள்: காலை 8 மணிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக் கான வகுப்பு துவங்கியது. பாடவாரியாக ஆசிரியர்கள் ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தனர். அவ்வப் போது பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதே போல பிளஸ் 2 அறிவியல் மற்றும் கலை பிரிவு மாணவர்களுக்கான வகுப்புக்கள் நடந்த போதும், தொடர்ந்து ஒன்றரை மணிநேரத்திற்கு கனமழை வெளுத்து வாங்கியது. இருப் பினும், நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் இல்லாமல், ஆசிரியர்கள் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கினர். மழையையும், இடியையும் பொருட்படுத்தாது மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் குறிப்பெடுத்தனர்.