உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு நண்பன் நூல்கள் தான்!

கல்லூரி மாணவிகள் நூல்களை சிறந்த நண்பனாக ஏற்று படிக்க வேண்டும்&' என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பேசினார். தமிழக அரசு, பொது நூலகத்துறை மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணையம் இணைந்து நடத்தும், 42வது தேசிய நூலக வார விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற, இவ்விழாவில், மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பேசியதாவது: பாட நூல்கள் மட்டும் இன்றி, பொது அறிவு புத்தகங்களையும் மாணவர்கள் படித்து, தங்கள் அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம். அண்ணாதுரை தனது உயிரை விட புத்தகங்களையே மிகவும் பெரிதாக நினைத்து படிப்பவர். அவரது பேச்சாற்றலுக்கும், அறிவாற்றலுக்கும் அவர் படித்த புத்தகங்கள் தான் காரணம்.வெளிநாடுகளில் நூலகங்களுக்கு அதிக முக்கியத்தும் தரப்படுகிறது.   இந்தியாவில் தமிழக நூலகங்கள் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன. கல்லூரி மாணவிகள் நூல்களை சிறந்த நண்பனாக ஏற்று படிக்க வேண்டும்.இவ்வாறு அவ்வை நடராஜன் பேசினார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது, கல்லூரி பருவத்தில் மாணவிகள் கேளிக்கைகள் மற்றும் பொழுது போக்குகளில் செலவழிக்கும் நேரத்தில் சிறிது நேரம், நூலகத்தில் செலவிட்டால் அது உங்கள் வாழ்வில் திருப்பு முனையாக அமையும். நூல்கள் படிக்கும் பழக்கம் உள்ள பெண்கள், சமுதாயத்தில் தனித்துவம் மிக்க பெண்களாக விளங்குவர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்