உள்ளூர் செய்திகள்

திருக்குறள் முற்றோதல் பரிசுத்தொகை அதிகரிப்பு: கலெக்டர்

சிவகங்கை: திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் திறன் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவர்கள் அறிந்து கொண்டு, கல்வி அறிவுடன் நல் ஒழுக்கத்துடன் செயல்படும் நோக்கில் 1330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகையை ரூ.10,000ல் இருந்து ரூ.15,000 ஆக அரசு உயர்த்தி உள்ளது. இந்த ஆண்டிற்கான (2023/-2024) திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு அனைத்து பள்ளிகளை சேர்ந்த ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறளையும் ஒப்பிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், குறளின் அடைமொழி, சிறப்பு, சிறப்பு பெயர்கள், உரை எழுதியோர் விபரங்களை தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாகும்.திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களிடம் நேரடியாக ஆய்வு செய்து, சிவகங்கை தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மூலம் சென்னை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சி துறை, சிவகங்கை அல்லது www.tamilvalarchithurai.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அக்., 31 க்குள் உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சிதுறை, கலெக்டர் அலுவலகம், சிவகங்கையில் வழங்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்