மாணவர்களுக்கு நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம்
காரியாபட்டி: மாவட்டத்தில் தற்போது மாலை நேர மழையால் நீர்நிலைகள் நிரம்பி வரும் சூழலில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை வேறு துவங்க உள்ளது. அதற்கு முன் நீர்நிலைகள் பற்றிய விழிப்புணர்வு, ஆழம் தெரியாமல் இறங்குவதை தவிர்ப்பது, முதலுதவி குறித்து பள்ளிகளில் அறிவுரை வழங்க வேண்டும்.நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி இல்லாததால் நீர் நிலைகள் பக்கம் செல்லாமல் பாதுகாப்பாக இருப்பது குறித்து கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.பருவ நிலை மாற்றத்தால் காற்றடிக்க வேண்டிய ஆடி மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அதற்கு ஏற்றார் போல் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே செப்டம்பரில் மாலை நேரங்களில் மழை பெய்கிறது. இதனால் பல நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை வந்தால் நகரங்கள், ஊராட்சிகளில் உள்ள கண்மாய், ஊருணி, குளம், குட்டைகளில் இன்னும் நீர் நிரம்ப வாய்ப்பு உள்ளது.மேலும் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால் தொடர்ச்சியாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. வெளியூர்களில் படிக்கும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு வரும் பொழுது அங்குள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து குஷியாகி விளையாட செல்கிறனர். நீர் நிலைகளுக்குச் சென்று மீன் பிடிப்பது, ஆழம் தெரியாமல் இறங்கி குளிப்பது, விளையாடுவது என இருப்பர். இதனால் நீரில் மூழ்கி இறக்கும் விபத்து அபாயமும் உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரும்பாலானவர்களுக்கு நீச்சல் தெரியாது. இவர்கள் விளையாட்டுத்தனமாக நீர் நிலைகள் பக்கம் பயமறியாமல் விளையாட செல்வர். இதுபோன்ற சமயங்களில் நீர் நிலைகளில் இறங்கும் போது அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.முன்பு இது போன்ற சம்பவங்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் விளையாடச் செல்லும் மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். மழைக்கு முன்பே கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி குறித்தும், நீர்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் அவசியம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம், கல்வித் துறை இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.