செல்போனால் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைந்துள்ளது
முதுகுளத்தூர்: அலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்துவிட்டது, என்று தினமலர் நாளிதழ் வாசகத்தை சுட்டிக்காட்டி முதுகுளத்துார் சார்பு நீதிபதி ராஜகுமார் பேசினார்.முதுகுளத்தூர் தாலுகா சட்டப்பணிகள் குழு சார்பில் உலக மன நல தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளியில் விழா நடந்தது.முதுகுளத்தூர் வட்ட சட்டப் பணி குழு தலைவர் சார்பு நீதிபதி ராஜகுமார் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் சிவராமகிருஷ்ணன், ஆசிரியர் உமாதேவி முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி ராஜகுமார் பேசியதாவது:இந்த ஆண்டு உலக மனநல தினத்தின் கருப்பொருள், மன நலம் என்பது உலகளாவிய மனித உரிமை, மனித உரிமைகள் அடிப்படை அணுகுமுறையில் மனநலம் தொடர்பான முயற்சிகளை விரைவுபடுத்த உலக சுகாதார அமைப்பானது தனது உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இப்போதுள்ள சூழ்நிலையில் நம் குழந்தைகள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் அலைபேசிகள் தான். குழந்தைகளை சாப்பிட வைப்பதற்காகவும், அழுகையை நிறுத்தவும் அவர்களிடம் அலைபேசியை கொடுத்து பழக்கப்படுத்தியுள்ளோம்.இதனால் குழந்தைகள் மனதளவில் அதிகம் பாதிப்படைகின்றனர். தினமலர் நாளிதழில் வாசகம் தினந்தோறும் வருகிறது. அதன்படி அலைபேசிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுக்க வேண்டும். ஆனால் நாம் அதை பின்பற்றுவது கிடையாது. இதனால் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து விட்டது.எனவே பெற்றோர் குழந்தைகளுக்கு அலைபேசி கொடுப்பதை நிறுத்திவிட்டு ஓடி, ஆடி விளையாட ஊக்கப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளை இதுபோன்ற பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி அளித்து மற்ற குழந்தைகள் போன்று அவர்களும் சமுதாயத்தில் வளர பெற்றோரும்,பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த பயிற்சி மையத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் மனதார பாராட்டுகின்றேன். அவர்கள் செய்வது மிகப்பெரிய சேவை,என்றார். பின் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். சிறப்பு பயிற்றுனர்கள் சாந்தி, நாகராஜ், குமரேசன், முருகேஸ்வரி, பிசியோதெரபிஸ்ட் விஜய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். சட்ட தன்னார்வலர் அடைக்கலமேரி நன்றி கூறினார்.