உள்ளூர் செய்திகள்

மழலைகளின் கல்விக்கு அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி

புதுச்சேரி: தினமலர் -பட்டம் இதழ் மற்றும் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில், இன்று (24ம் தேதி) அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது.தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் புதுச்சேரி விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில், அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, லாஸ் பேட்டை செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி சரஸ்வதி ஹாலில் இன்று காலை 7:00 மணிக்கு துவங்கி காலை 10:00 மணி வரை நடக்கிறது.முழுக்க முழுக்க கல்வி சேவைக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, எந்த பள்ளிக்கும் அட்மிஷனுக்காக நடத்தப்படவில்லை. நிகழ்ச்சியில் 2.5 மற்றும் 3.5 வயது மழலைகள் விரல் பிடித்து கல்வியாளர்கள், மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள் அ -ஆ எழுதி பழக்க உள்ளனர்.விவேகானந்தா கல்வி குழும தலைவர் செல்வகணபதி எம்.பி., கலெக்டர் வல்லவன், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன், ஆர்.எஸ்.எஸ்., புதுச்சேரி மாநில தலைவர் ஆடிட்டர் செல்வராஜ், புதுச்சேரி சுகாதார துறை முன்னாள் இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தி அகரம் கற்பிக்க உள்ளனர்.குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கும் முதல் நாள், அவர்களின் வாழ்நாளில் மிக முக்கியமான நாள். குழந்தைகளின் ஆரம்ப நிலை கல்வி தான், அறிவாற்றலுக்கும், நற்பண்புகளுக்கும் வாழ்நாள் முழுதும் துணை நிற்கும்.விஜயதசமி திருநாள் கல்வி கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடி ஆரம்பித்து வைக்க கல்வியாளர்கள் காத்திருக்கின்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஸ்கூல் கிட் பரிசாக வழங்கப்படும். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி. கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்கயுள்ள உங்க செல்ல குழந்தைகளை இன்று காலை 7:00 மணிக்குள், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்