தமிழ் திறனறி தேர்வில் மாணவிகள் சாதனை
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே கட்டுக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 6 பேர் தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான தமிழ் திறனறித் தேர்வு அக் 15 ல் நடந்தது. இதில் 1500 பேர் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ. 1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 36,910 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் எஸ்.புதூர் ஒன்றியம் கட்டுக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த அனிதா, பாத்திமா பேகம், பிரியதர்ஷினி, அபிநய பூமிகா, ராஜலட்சுமி, சின்னம்மாள் ஆகிய 6 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களை தலைமை ஆசிரியர் சிபி சக்கரவர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.