கோடையிலும் மாணவர்களுக்கு மதிய உணவு
பெங்களூரு: வறட்சி பாதித்த 223 தாலுகாக்களில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கர்நாடகாவில் கடந்தாண்டு, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் கடும் வறட்சி ஏற்பட்டு, குடிப்பதற்கு கூட தண்ணீரின்றி மக்கள் கஷ்டப்படுகின்றனர்.மாநிலத்தின், 223 தாலுகாக்கள், வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது. ஏற்கனவே தண்ணீரின்றி கஷ்டப்படும் நிலையில், தற்போது கோடைகாலம் என்பதால், தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நீர், தீவனம் இன்றி கால்நடைகளும் அவதிப்படுகின்றன.கர்நாடகாவில், பள்ளிகளுக்கு ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வறட்சி பாதிக்கப்பட்டுள்ள 223 தாலுக்காகளில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே கோடை விடுமுறை நாட்களில், ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் ஆறு நாட்களும், தினமும் நண்பகல் 12:30 மணி முதல் 2:00 மணி வரை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி அடையாளம் காணப்பட்டுள்ளது. 2 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற பள்ளி மாணவர்களும், அந்த பள்ளிக்கு வந்து மதிய உணவு சாப்பிட வேண்டும்.மதிய உணவு சாப்பிட விரும்பும் மாணவர்கள், பெற்றோரின் ஒப்புதல் பெற்று வர வேண்டும். விடுமுறையால், உறவினர்கள் வீட்டுக்கு சென்றுள்ள மாணவர்கள், அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் சாப்பிடலாம்.விடுமுறை நாட்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பின்னர் மாற்று விடுமுறை எடுத்துக் கொள்ள சிறப்பு அனுமதி தரப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.