சிறப்பு குழந்தைகளுக்கு இலவச கல்வி வாய்ப்பு
சென்னை: மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை, அவர்களுக்கான பள்ளிகள், இல்லங்கள் மற்றும் பயிற்சி மையங்களில் சேர்த்து, கல்வி மற்றும் பயிற்சிகளை, எவ்வித கட்டணமுமின்றி பெற்று பயன் பெறலாம் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக அரசு மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வழியே, சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி போன்றவை, இலவசமாக வழங்கப்படுகின்றன.ஒவ்வொரு மாவட்டத்திலும், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழியே செயல்படுத்தப்படுகின்றன. இதில், 104 சிறப்பு பள்ளிகள், விடுதியுடன் செயல்படுகின்றன. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வழியாக, 430 பகல் நேர பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன.ஆரம்பத்திலேயே சிறப்பு குழந்தைகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் மனவளர்ச்சி குன்றியோருக்கான, ஆரம்ப கால பயிற்சி மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வழியே செயல்படுத்தப்படுகிறது.மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி இல்லம் செயல்படுகிறது. எனவே, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர், பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளை, அவர்களுக்குரிய பள்ளிகள், இல்லங்கள், பயிற்சி மையங்களில் சேர்த்து, கல்வி மற்றும் பயிற்சிகளை இலவசமாக பெற்று பயன்பெறவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.