உள்ளூர் செய்திகள்

எமிஸ் பயிற்சி புறக்கணிப்பு; அலுவலர்கள் போராட்டம்

மதுரை: மதுரையில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான எமிஸ் பணி பயிற்சியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்வித்துறையில் எமிஸ் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன. ஆனாலும் ஆசிரியர்களுக்கான எமிஸ் பணிச்சுமை குறையவில்லை. இதையடுத்து தனியார் நிறுவனம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்தி எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் சி.இ.ஓ., அலுவலகத்தில் செப்.10ல் நடக்கும் எமிஸ் பணி பயிற்சியில் பங்கேற்க சி.இ.ஓ., கார்த்திகா உத்தரவிட்டிருந்தார். ஆனால் அலுவலகம் வந்த உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் பயிற்சியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் நலச்சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஆறுமுகம் உட்பட 120 பேர் பங்கேற்றனர்.சங்கத் தலைவர் ரமணிதேவி கூறியதாவது: ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களால் இப்பணியை செய்ய முடியவில்லை என கோரிக்கை வைத்துள்ளதால் எங்களை இப்பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. 13 ஆண்டுகள் பதவி உயர்வின்றியும், பணிச்சுமையாலும் தவித்து வருகிறோம். இந்நிலையில் எமிஸ் பணியையும் அளித்தால் மனஉளைச்சலுக்கு ஆளாவோம். இதை கல்வித்துறை கைவிட வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்