உலக விண்வெளி வாரவிழா கட்டுரை போட்டி
மதுரை: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய அரசு விண்வெளித்துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்து வளாகம் சார்பில் அக். 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடக்க உள்ளது.6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு நம் உலகை எப்படி மாற்றியுள்ளது தலைப்பிலும், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் விண்வெளி நிறுவனங்களின் பங்கு தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறும்.கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். பங்கேற்கும் மாணவர்களின் கையெழுத்தில் A4 (210 X 197 மி.மீ) அளவு தாளில் 1500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தல் அவசியம்.பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இக்கட்டுரை தங்களால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து ஒப்புதல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.உறையின் மேல் உலக விண்வெளி வார - கட்டுரைப்போட்டி என்று குறிப்பிட வேண்டும். தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். கட்டுரைகள் செப். 20 அல்லது அதற்கு முன்பாகவோ நிர்வாக அதிகாரி, இஸ்ரோ உந்து வளாகம், (ஐ.பி.ஆர்.சி.,), மகேந்திரகிரி, திருநெல்வேலி -627 133 என்ற முகவரிக்கு அனுப்பலாம். விபரங்களுக்கு 94860 41737 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.