அண்ணாமலை பல்கலையில் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 220 தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிகின்றனர். பல கட்ட போராட்டத்திற்கு பின்பு, கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்புதான் தினக்கூலி 440 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்நிலையில், நிதி சிக்கல் காரணமாக, 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தொழிலாளர்களை, பல்கலை., நிர்வாகம் பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் ஜூன் மாத சம்பளமும் இதுவரை வழங்கவில்லை.பணி நீக்க நடவடிக்கையை கண்டித்து பல்கலை., வளாகத்தில் மா.கம்யூ., சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, வி.சி., மாவட்ட செயலாளர் தமிழ் ஒளி, இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர், வட்ட செயலாளர் தமிம் முன்சாரி, காங்., நகர தலைவர் தில்லை மக்கின், பல்கலைக் கழக அனைத்து சங்க நிர்வாகிகள் மனோகரன், ரவி, சுப்பிரமணியன், ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து, பல்கலை., நிர்வாக அலுவலகத்தில், தாசில்தார் கீதா, துணைவேந்தர் குழு உறுப்பினர் அருட்செல்வி ஆகியோர் போராட்டக்குழுவினருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டத்தில், உடனடியாக ஜூன் மாத சம்பளம் வழங்குவது. பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.