பள்ளி உணவு திட்டம் ஆலோசனைக் கூட்டம்
தேனி: தேனி மாவட்டத்தில் 710 பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத்திட்டம், மதியம் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்கள் பற்றிய கண்காணிப்பு, ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் நடந்தது.நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு துறை மூலம் தினமும் மாலை 06:00 மணிக்குள் உணவுப்பொருட்களை வினியோகிக்க வேண்டும். பொருட்களின் தரம், எடை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சமையல் காஸ் சிலிண்டர்கள் இருப்பை கண்காணிக்க, சத்துணவு மையங்களில் உள்ளாட்சி அமைப்புகள் நிதியில் ஜன்னல்களுக்கு வலை அமைத்து தர அறிவுறுத்தப்பட்டது.இத்திட்டங்களின் தினசரி செயல்பாடுகள் பற்றிய குறுந்தகவலை அலுவலர்கள் தினமும் பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் வீராச்சாமி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சுப்பாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.