உள்ளூர் செய்திகள்

‘மாநிலத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு’

திருவள்ளூர்: மாநிலத்தில், படித்து வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளித்து ஒரு லட்சம் இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் கூறினார். திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக முன்பதிவு செய்த 13 ஆயிரம் ஆண், பெண்களுக்கு நேற்று நேர்முகத் தேர்வு திருவள்ளூரில் நடந்தது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பேசியதாவது: ‘தமிழக அரசு, இளைஞர்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது. கடந்த ஆட்சியில் வேலை வாய்ப்பு தடை சட்டம் அமலில் இருந்தது. இதனால், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாமல் இருந்தனர். முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் வேலைவாய்ப்பு தடை சட்டத்தை நீக்கி கடந்த நான்கரை ஆண்டுகளில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மருத்துவர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என நான்கு லட்சத்து 65 ஆயிரத்து 748 பேருக்கு அரசுப் பணி வழங்கி உள்ளார். மேலும் பல இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் 80க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து பணி வழங்க அரசு முடிவு செய்தது. இதன்படி, மாநிலத்திலேயே முதன்முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டு 13 ஆயிரம் பேர் வேலை கேட்டு முன்பதிவு செய்தனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (நேற்று) நடந்துகொண்டு இருக்கிறது. இதில் தகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும். அடுத்த கட்டமாக திருவாரூர் மாவட்டத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நடைபெறும். இவ்வாறு தமிழகம் முழுதும் நடத்தப்படும் முகாம்கள் மூலம் ஒரு லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்’ என்றார். முகாமில் மீன்வளத்துறை அமைச்சர் சாமி, மாவட்ட கலெக்டர் ராஜேஷ், திருவள்ளூர் எம்.எல்.ஏ., சிவாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்