உள்ளூர் செய்திகள்

விப்ரோ நிறுவனத்தில் ஒப்பந்த முறை ரத்து

சாப்ட்வேர் நிறுவனங்களில் புதியவர்கள் பணியில் சேரும் போது அவர்களை பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிறுவனங்கள் வற்புறுத்துவது நாம் அறிந்ததுதான். இந்தியாவிலுள்ள பல்வேறு பிரம்மாண்ட ஐ.டி., நிறுவனங்கள் இந்த வழக்கத்தை நடைமுறைப்படுத்தும் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் இந்த முறையைப் பின்பற்றுவதில்லை என்பது ஆச்சரியமான உண்மையாகும். சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் ஐ.டி., நிறுவனங்கள் வெகு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய நிலையில் திறனாளர்களைக் கவர்ந்து இழுப்பதற்கான போட்டி வெகுவாக அதிகரித்து வருகிறது. ஊதிய உயர்வுகள், சலுகைகள் என்று பல்வேறு அம்சங்களை இன்றைய இந்திய ஐ.டி., நிறுவனங்கள் அன்றாடம் அறிவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் விப்ரோ நிறுவனம் புதிதாகப் பணியில் சேரும் பிரெஷர்கள் இனி பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியதில்லை என்ற அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.ஆனால் 15 மாத கால பயிற்சி ஒப்பந்தத்தை மட்டும் விப்ரோ இன்னமும் தொடர்கிறது. இந்தியாவின் ஐ.டி., நிறுவனங்களுள் முக்கியமானவையான டி.சி.எஸ்., மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் பணி ஒப்பந்த முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றன. உதாரணமாக டி.சி.எஸ்., நிறுவனம் இரண்டு ஆண்டு கால பணி ஒப்பந்தத்தையும், இன்போசிஸ் நிறுவனம் ஒரு ஆண்டு கால பணி ஒப்பந்தத்தையும் அமல்படுத்துகின்றன. ஆனால் காக்னிசண்ட் நிறுவனம் இது போன்ற முறையை அமல்படுத்துவதே இல்லை. அட்ரிஷன் விகிதம் அதிகரிப்பது, ஊழியர்களை உருவாக்குவதற்காக செலவிடப்படும் கணிசமான செலவைக் கட்டுப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக பணி ஒப்பந்தங்கள் போடப்படுவது ஐ.டி., நிறுவனங்களால் நியாயப்படுத்தப்பட்டாலும், பணிக்கான பிணைய ஒப்பந்தத்தை ரத்து செய்வது மாணவர்களிடையே மகிழ்ச்சி அலைகளை உருவாக்கி வருவது என்னவோ நிஜம்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்