கைவினை திட்டத்தில் கடன் 1,700 பேர் விண்ணப்பம்
சென்னை: தமிழக அரசின் கலைஞர் கைவினை திட்டம், துவங்கப்பட்ட ஒரு வாரத்தில், கடனுதவி கேட்டு, 1,700 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.நகை செய்தல், தையல் வேலை உள்ளிட்ட, 25 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்கள், தங்களின் தொழிலை மேம்படுத்துவதற்கு கடன் வழங்குவதற்காக, கலைஞர் கைவினை திட்டத்தை அரசு துவக்கியுள்ளது. இதை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயல்படுத்துகிறது.இத்திட்டத்தில் பயனாளிக்கு, 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு அதிகபட்சம், 50,000 ரூபாய் வரை மானியமும், 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. கைவினை திட்டத்தில் கடன் பெறுவதற்கு, சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, 11ம் தேதி துவங்கியது.நேற்று வரை ஒரு வாரத்தில் மட்டும் கடன் கேட்டு, 1,700 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களின் கடன் தொகை, 35 கோடி ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதில், 8 கோடி ரூபாய் மானியம்.