ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் ரூ.2.18 கோடிக்கு விற்பனை மாணவர்கள் உட்பட 1.63 லட்சம் பேர் வருகை
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 8 வது புத்தத்திருவிழா ஜன., 25 முதல் பிப்., 4 வரை நடை பெற்றது. இந்நாட்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 76,310 பேர் உட்பட 1,63,340 பேர் வருகை தந்துள்ளனர். ரூ.2 கோடியே 18 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜன., 25 முதல் பிப்., 4 வரை புத்தகத் திருவிழா நடத்தினர்.நிறைவு விழாவிற்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன் முன்னிலை வகித்தார்.இவ்வாண்டு புத்தகத் திருவிழாவில் ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றிருந்தது. பாரம்பரிய உணவு, மூலிகை மருத்துவம், ஓவியக் கண்காட்சி, மாணவர்களுக்கான பல்வேறு விதமான பயிற்சி பட்டறை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் நடந்தன.கடந்த 10 நாட்களில் 69,550 பள்ளி மாணவர்கள், 6760 கல்லுாரி மாணவர்கள், 87,000 பொதுமக்கள் என 1 லட்சத்து 63 ஆயிரத்து 340 பேர் புத்தக கண்காட்சி அரங்கை பார்வையிட்டுள்ளனர். ரூ.2 கோடியே 18 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.நிறைவு விழா நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ஹபிபூர் ரகுமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட நுாலக அலுவலர் (பொ) அனிதா, ராமநாதபுரம் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி உட்பட பலர் பங்கேற்றனர்.பி.ஆர்.ஓ., பாண்டி நன்றி கூறினார்.