பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நவ. 4ல் பேச்சு போட்டி
சிவகங்கை: மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நவ., 4 மற்றும் 5 தேதிகளில் சிவகங்கையில் பேச்சு போட்டிகள் நடத்தப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது:காந்தி பிறந்த நாளை முன்னிட்டு 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு நவ., 4 ம் தேதி பேச்சு போட்டி நடத்தப்படும்.பள்ளி மாணவருக்கு விடுதலை போராட்டத்தில் காந்தியின் பங்கு, மதுரையில் காந்தி, வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற தலைப்புகளும், கல்லுாரி மாணவர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் காந்தி, தண்டியாத்திரை, உப்பு சத்தியாகிரகம் போன்ற தலைப்புகளில் நடத்தப்படும்.ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நவ., 5 ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு, குழந்தைகள் விரும்பும் தலைவர் நேரு, நேருவும் பெண்கள் மேம்பாடும், ரோஜாவின் ராஜா ஆகிய மூன்று தலைப்புகளில் பேச்சு போட்டி நடக்கும்.கல்லுாரி மாணவர்களுக்கு சுதந்திர இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கு நேருவின் பங்களிப்பு, இந்தியாவின் முதல் பிரதமர், நேருவின் அணிசேரா கொள்கை ஆகிய மூன்று தலைப்புகளில் போட்டி நடைபெறும். போட்டிகள் அனைத்தும் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கல்வித்துறை கருத்தரங்கு கூடத்தில் நடைபெறும். போட்டி நாளன்று குலுக்கல் முறையில் தலைப்பு தேர்வு செய்து தரப்படும். ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியில் இருந்து தலா ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்கலாம்.போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு கடிதத்தில் தலைமை ஆசிரியர், முதல்வரின் ஒப்புதல் பெற்று, சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைப்பதோடு, கூடுதல் விபரங்களை அங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.