உள்ளூர் செய்திகள்

இட ஒதுக்கீட்டிற்கான வருமான உச்சவரம்பு ரூ.4.5 லட்சமாக அதிகரிப்பு!

தற்போதுள்ள ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திலிருந்து, ரூ. 4.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்தது. இந்த இடஒதுக்கீட்டினை மூன்று ஆண்டுகளில் படிப்படியாக செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், அவர்களுக்காக கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, உயர் கல்வி நிறுவனங்களில் நடப்பு கல்வி ஆண்டில், பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 9 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அங்கீகரித்த சுப்ரீம் கோர்ட், இந்தப் பிரிவினரில் முன்னேறிய பிரிவினர் ஆதாயம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களை இதிலிருந்து விலக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், கிரீமி லேயருக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு, கடந்த 2004ம் ஆண்டில் ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், ஏராளமானவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவானது. அதே நேரத்தில், பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் கடந்த ஜூலை 1ம் தேதி, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினருக்கான (கிரீமி லேயர்) வருமான உச்சவரம்பை, 4.5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அக்., 3ம் தேதி நடந்தது. அதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியதாவது:இதர பிற்பட்ட வகுப்பினரில், முன்னேறிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு 4.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இதர பிற்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் அதிகம் பேர் பலன் பெற முடியும். மத்திய அரசின் வேலை வாய்ப்பு ஒதுக்கீட்டிற்கும் இந்த வருமான உச்சவரம்பு பொருந்தும். மத்திய அமைச்சவையின் இந்த முடிவு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும், மத்திய பணியாளர் நலத்துறைக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில், அவர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளில் ஆட்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பர். வருமான உச்சவரம்பை அதிகரிக்கும் இந்த பரிந்துரை, உள்துறை, பணியாளர் நலத்துறை, சட்டம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் நல அமைச்சகம் என, பல அமைச்சகங்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து அமைச்சகங்களும், வருமான உச்ச வரம்பை அதிகரிக்க ஆதரவு தெரிவித்தன. தற்போது மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்து விட்டது. இவ்வாறு அமைச்சர் தாஸ் முன்ஷி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்