வயது பிரச்சினையால் எம்.பி.பி.எஸ். படிப்பில் 46 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
சென்னை: எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் குறைந்தபட்ச வயதில், ஒரு நாள், இரண்டு நாள் குறைவாக இருந்ததற்காக, 46 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என, சென்னை உயர்நீதிமன்றத்தில், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு பதிலளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள கிழக்கு கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் ராமானுஜம். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த ஆண்டு டிசம்பருக்குள் 17 வயது பூர்த்தி அடையாததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்கராசு மனு தாக்கல் செய்தார். குறைந்தபட்ச வயது வரம்பை தளர்த்தி மகனுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன் எம்.பி.பி.எஸ். படிப்பில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதா? என பதிலளிக்கும்படி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு உத்தரவிட்டார். தேர்வுக் குழு சார்பில் கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு குறைவாக 46 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் ஒரு நாள், இரண்டு நாள், நான்கு நாள், ஆறு நாள் என குறைவாக இருந்தது. அந்த விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கு 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த விதிமுறைதான் 20 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே இந்த கல்வியாண்டில், மனுதாரரின் மகன் மருத்துவப் படிப்பில் சேர தகுதியில்லை. அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணையை வரும் 13ம் தேதிக்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தள்ளிவைத்தார்.