கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் இடங்கள் அதிகரிப்பு
கவுகாத்தியில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 2012ம் ஆண்டுக்குள் உள் கட்டமைப்பு வசதிகள் அதிகப்படுத்தப்பட இருப்பதோடு மாணவர்களின் எண்ணிக்கையும் 2 மடங்காக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த கல்வி நிறுவனத்தில் 2100 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதுதொடர்பான ரூ.300 கோடிக்கான முன்மொழிவை ஐ.ஐ.டி., கவுகாத்தி மத்திய அரசின் மனித வள அமைச்சகத்திடம் கொடுத்துள்ளது. இதனால் 4 ஆயிரம் மாணவர்களுக்கு சேர்க்கையும் அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் பெற முடியும் என கவுகாத்தி ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது. ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு தரப்பட இருப்பதை ஒட்டி 2010ம் ஆண்டுக்குள் மொத்த இடங்களில் 57% அதிகரிக்கப்பட வேண்டும் என்பதால் இந்த கூடுதல் இடங்கள் திட்டமிடப்படுகின்றன. 700 ஏக்கர் நிலப் பரப்பை தன்னகத்தே கொண்டுள்ள கவுகாத்தி ஐ.ஐ.டி. 550 ஏக்கர் நிலத்தை இதற்காக பயன்படுத்தவுள்ளது. இதற்காக கட்டிடங்கள், சோதனைக் கூடங்கள், ஹாஸ்டல்கள், உபகரணங்கள் என விஸ்தீரணம் செய்யப்படுவதற்கான முன்மொழிவை இந்த நிறுவனம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பின் இவற்றிலுள்ள இடங்கள் 3 மடங்காக அதிகரிக்கப்படுவது தொடர்பாக இந்த முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. இதையொட்டி மனித வள அமைச்சகம் இந்த கல்வி நிறுவனங்கள் இட அதிகரிப்பு தொடர்பான பரிந்துரைகளை அனுப்புமாறு பணித்தது. இந்திய அரசின் முயற்சிகளான 8 புதிய ஐ.ஐ.டிக்களை உருவாக்குவது, 7 புதிய ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.களை உருவாக்குவது என்ற முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.