உள்ளூர் செய்திகள்

செய்வதை திட்டமிடுங்கள்; திட்டமிட்டதையே செய்யுங்கள்

மேல்நிலை வகுப்பில் படிப்பதால் மட்டுமே உயர்ந்துவிட்டதாக கருதிவிடக்கூடாது. கடின உழைப்பின் மூலம் படிப்பில் மிகச்சிறந்து விளங்கினால்தான் எதிர்காலம் என்ற கதவு திறக்கும். ஒரு மாணவரின் முக்கியமான காலகட்டம் அவர் பிளஸ் 2 படிக்கும் காலம்தான். இக்காலம்தான் எதிர்காலத்தில் உங்கள் வளர்ச்சிப் பாதையை நிர்ணயிக்கப் போகிறது. புத்திசாலித்தனமான திட்டம் மற்றும் அவற்றை மிகச்சரியாக செயல்படுத்துவதே வெற்றிக்கு அடிப்படை. லட்சியத்தை தீர்மானித்தல்: உண்மையில் நீங்கள் கனவு காண வேண்டும். உங்கள் லட்சியத்தின் மறு வார்த்தையே இது. குறுகிய காலத்தில் அடைய வேண்டிய லட்சியங்கள் எவை. நீண்ட காலத்தில் அடைய வேண்டிய லட்சியங்கள் எவை என்பதை தெள்ளத்தெளிவாக பகுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் லட்சியம் அறுவை சிகிச்சை நிபுணராகவோ, வழக்கறிஞராகவோ, ஒளிப்பதிவாளராகவோ, கட்டடக்கலைஞராகவோ, இன்ஜினியராகவோ, பத்திரிகையாளராகவோ அல்லது பெரிய விவசாயியாகவோ ஆவதாக இருக்கலாம். இவ்வாறு நீங்கள் தீர்மானம் பூண்ட பின்னர், அதை நோக்கியே உங்களது ஒவ்வொரு செயலும் இருக்க வேண்டும். ஒருமுகப்படுத்துதல்: ஒரு தீக்குச்சியை நீங்கள் நல்ல பகலில் சூரியனை நோக்கி பிடித்துக் கொண்டிருங்கள். ஒன்றுமே நடக்காது. ஆனால் அதையே குவிலென்சின் வழியாக சூரிய ஒளியை தீக்குச்சியின் முனையை நோக்கி காட்டுங்கள். அத்தீக்குச்சி பட்டென தீப்பற்றி எரியும். நீங்கள் எந்த வித கவனச்சிதறல் இல்லாமல் உங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தியே வந்தீர்களேயானால், நீங்கள் உண்மையில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் கவனச்சிதறல் அடைந்தீர்களேயானால் - உங்கள் லட்சியத்தை அடைய நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். ஆகவே படிக்கும் காலத்தில், உங்கள் சிந்தனையே ஒருமுகப்படுத்துங்கள். கவனிக்க வேண்டியவை: பாடத்திட்டம், பாடப்புத்தகம், பழைய வினாத்தாள்கள் ஆகிய அனைத்தையும் நீங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள். அன்றைய வகுப்பில் நடத்தப்போகும் பாடத்தை முன்னதாக தயார் செய்து கொள்வது உங்களுக்கு நல்ல பலன் தரும். உங்களுக்கு எழும் சந்தேகங்களை வகுப்பறையில் தீர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். கால அட்டவணை: ஆண்டு துவங்கும்போதே படிக்கும் கால அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த பாடம் கடினமாக இருக்கிறதோ அந்தப் பாடத்துக்கு அதிகமான நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த நேரத்தில் படிப்பது சரி என்று தோன்றுகிறதோ அந்த நேரத்தை படிப்பதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள். பொதுவான பிற விஷயங்களைப் படிக்கவும் ஓய்வாக இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். வீட்டு வேலைகளை செய்வதும் மனம் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் உங்கள் கால அட்டவணையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். படிக்கும் வழக்கம்: குறைந்த நேரத்தில் நிறைய கற்றுக் கொள்வதற்கு பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வேகமாக ஒரு விஷயத்தை படித்து புரிந்து கொள்கிறீர்கள் என்பதும் முக்கியம். கணக்குகளை தீர்த்தல்: பாடத்தில் உள்ள கணக்குகளை படித்து பார்க்கும்போது அது எளிதாக தெரியலாம். ஆனால் அதையே நீங்கள் தீர்க்க முயன்றால் கடினமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் எந்த இடத்தில் பிரச்னை வருகிறது என்பதை அறிந்து பாடப்புத்தகத்தை வைத்துக் கொண்டு கணக்குகளை தீர்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகையான கணக்குகளை இவ்வகையில் தீர்த்துப் பழகினால் எளிதில் அக்கணக்கை எப்படிக் கேட்டாலும் தீர்ப்பதற்கு பழகிக் கொள்ளலாம். வரைபடங்கள்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை விளக்குவதற்கு வரைபடங்களைப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்த படங்களை நீங்கள் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். புகைப்படத்தைப் போல் இது நம் மனதில் பதிந்துவிடாது. ஆனால் தேர்வுத் தாளில் கேட்கப்படும் வினாக்களுக்கு அதிலிருந்து பதில் அளிக்க வேண்டியிருக்கும் - அதை வரைய வேண்டியிருக்கும் என்பதால் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை வரைந்து பழகிக்கொள்வதன் மூலமே அவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும். குழப்பமடைவதை தவிர்த்துவிடுங்கள்: ஒரு விஷயத்தை அதிகமாகப் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. இன்று என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் சிந்தித்து செயல்படவேண்டும். நாளை என்பதை அடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். எதையும் இப்போதே செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். வாசிக்கும் பழக்கம்: சத்தம் போட்டு படிப்பதை தவிருங்கள். ஒருவேளை உச்சரிப்பை தெரிந்து கொள்வதற்காக அல்லது பாடலை படிப்பதற்காக வேண்டுமானால் சத்தம் போட்டு படிக்கலாம். அமைதியாக படிப்பதே நல்லது. எளிதான பாடத்தை வேகமாக வாசித்து முடித்துவிடுங்கள். அகராதி: அகராதிகளை உபயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள். வார்த்தைகளை அதன் மூலம் கற்றுக் கொள்ளுங்கள். லேனர்ஸ் டிக்சனரியை பயன்படுத்துவது நல்லது. இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று மற்றவர்களிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டு இருக்காதீர்கள். மனதில் வைப்பது எப்படி: விப்ஜியார் என்பதன் மூலம் எப்படி ஏழு நிறங்களை நாம் வைத்திருக்கிறமோ அதே போல், ஒவ்வொரு விஷயத்தையும் ஒப்பிட்டு ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். கட்டுரை எழுதுவது எப்படி: கட்டுரை எழுதும் போது முக்கிய விஷயங்களை முதலில் பட்டியலிட்டு மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக அவற்றை விவரித்து எழுதலாம். மனதில் புரிந்து வைத்திருக்கும் விஷயங்களை இவ்வாறு நீங்கள் முதலில் எழுதிக் கொண்டு பின்னர் ஒவ்வொன்றாகக் கூட அவற்றை விளக்குவதில் தவறில்லை. நுழைவுத் தேர்வுகள்: ஐ.ஐ.டி., ஜே.இ.இ., மற்றும் ஏ.ஐ.இ.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் போது, அவற்றின் பாடத்திட்டமும் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டமும் ஒன்றுதான். ஆனால் கேள்வி கேட்கும் விதம்தான் வேறு என்பதை புரிந்து கொண்டு படித்தால் நுழைவுத் தேர்வுக்கு தயராவதும் எளிதாக இருக்கும். திருப்புதல்: தேர்வுக்கு முன்பாக படித்த பாடங்களை திருப்பிக் கொள்தல் நல்லது. திருப்புதல் மூலம் நீங்கள் விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பதால், நுழைவுத் தேர்வுகளை எளிதில் முடிக்கலாம். இனிமையான தேர்வு: தேர்வுகளை நெருக்கடியாக நினைக்காதீர்கள். தேர்வு அறையில் நீங்கள் தேர்வு எழுதும் குறிக்கோளுடன் அமைதியாக இருங்கள்.வேறு ஏதும் சிந்திக்க வேண்டாம். கேள்விகள் சாதாரணமானவைதான். கேள்வி தயார் செய்யும் யாரும் கஷ்டமான கேள்வியைத்தான் கேட்க வேண்டும் என்று திட்டமிட்டு கேள்விகளை தயார் செய்வதில்லை. செய்வதை திட்டமிடுங்கள். திட்டமிட்டதை செய்யுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே. - பி.எஸ்.வாரியார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்