மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற...
நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது குறித்தும், அதிக மார்க் பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆலோசனை: கணிதம்: வி.எஸ்.முருகேசன்(ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி, போடி): விடை தெளிவாகவும், அடித்தல் திருத்தல் இன்றியும் எழுத வேண்டும். எத்தனை பாடங்கள் உள்ளன, கேள்வித்தாள் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தெரிந்து வைத்திருந்தால் கூடுதல் மார்க் பெற முடியும். அனைத்து தேற்றங்களை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். விதிகளை சரிபார்க்க தெரிய வேண்டும். மாதிரிப்படம் அவசியம். அப்போதுதான் முழு மார்க் பெறமுடியும். வேகமும், துல்லியமும் நூற்றுக்கு நூறு மார்க் பெறுவதற்கு உதவும். ஆங்கிலம்: எஸ்.ரவிச்சந்திரன் (அரசு மேல்நிலைப்பள்ளி, சில்லமரத்துப்பட்டி): ஆங்கிலம் முதல் தாளில் புத்தகத்திலுள்ள டி.இ.எச்.ஐ., பகுதிகளில் கவனம் செலுத்தினால் 30 மார்க் எளிதாக பெறலாம். இரண்டாம் தாளில் நோட் மேக்கிங், கின்ட்ஸ் டெவலப்பிங், லெட்டர் ரைட்டிங், பிரீசிஸ் ரைட்டிங் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். முந்தைய ஆண்டு கேள்வித்தாளில் கேட்ட கேள்விகளை கவனிக்க வேண்டும். விடைகளை திரும்ப திரும்ப எழுதி பழகிக் கொள்ள வேண்டும். சமூக அறிவியல்: பி.முருகேசன்(ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி, போடி): கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். தலைப்புகளில் கோடிட்டு காட்ட வேண்டும். பல மாணவர்கள் இதில் அக்கறை காட்டுவதில்லை. முழுக்க முழுக்க இந்தியாவைப்பற்றியே இருக்கும் என்பதால் மனப்பாடம் செய்வதை விட எளிதில் புரிந்து படிப்பது நல்லது. புவியியல் வரைபடத்தில் கவனம் செலுத்தினால் எளிதாக 10 மார்க் பெறலாம். அறிவியல்: டி.ஏ.சித்தையன் (ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி போடி): நூற்றுக்கு நூறு மார்க் பெற எல்லா பாடத்திலும் பின்புறம் உள்ள வினாக்களுக்கான பதிலை தெளிவாக படித்துக்கொள்ள வேண்டும். பாடங்களை திட்டமிட்டு படிப்பது முக்கியம்.முக்கிய கேள்விக்கான பதில்களை திரும்ப திரும்ப எழுதி பார்க்க வேண்டும். தன் மதிப்பீட்டு வினாக்களுக்கு கீழ் கொடுக்கப்பட்ட கணக்குகளை நன்கு தெரிந்திருக்க வேண்டும். பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆலோசனை: ஆங்கிலம்: ஒ.பழனிச்சாமி (எஸ்.யு.எம்., மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி): கட்டுரை, பத்தி வினாக்களுக்கான விடைகள் மட்டும் மார்க் பெற உதவாது. ஆரம்பத்தில் இருந்து கிராமருக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஒரு மார்க், இரண்டு மார்க் மொழிப்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். முந்தைய வினாத்தாள்கள், பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சிகள் முழு கவனம் செலுத்த வேண்டும். கணிதம்: சி.தினகரன் (ஸ்ரீ வரத வேங்கடரமணா மேல்நிலைப்பள்ளி, வெங்கடாசலபுரம்): முதல் நான்கு பாடங்களில் தெளிவாக இருந்தால் எளிதில் தேர்ச்சி பெறலாம். முதல் பாகத்தில் 130 மார்க் வரும். 30 ஒரு மார்க் வினாக்கள் புத்தகத்திலிருந்து கேட்கப்படும். அதை தெளிவாக திரும்ப, திரும்ப குறித்து பார்க்க வேண்டும். 5 முதல் 10 மாதிரி தேர்வுகள் எழுதி பார்த்தால் 200 மார்க் பெற முடியும். வேதியியல்: பி.இளங்கோ (ஸ்ரீ கிருஷ்ண அய்யர் மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர்): பாடங்களுக்கு பின்புறம் உள்ள ஒரு மார்க் வினாக்களை படிக்க வேண்டும். அனைத்து சேர்மங்கள், ‘எப்’ தொகுதி தனிமங்கள், வெப்ப இயக்கவியல் பகுதியில் உள்ள 5 மார்க் வினாக்களை மட்டும் படித்தால் எளிதில் பாஸ் செய்து விடலாம். பெரிய வினாக்கள் எந்த பாடத்தில் எழுதுவது என்பதை தீர்மானித்து அதில் உள்ள வினாக்களை தெளிவாக படித்துக்கொள்ள வேண்டும். ஒரு மார்க், 3 மார்க் வினாக்களில் தனிக்கவனம் செலுத்தினால் 200 மார்க் சாத்தியமாகும். இயற்பியல்: ஆர்.மரகத மணிமாறன்(அரசு மேல்நிலைப்பள்ளி, சிலமலை): புத்தகத்தின் பின்பக்கம் உள்ள 136 ஒரு மார்க் கேள்விகளில், 15 கேள்விகள் தேர்வுக்கு கேட்கப்படும். 2, 7 பாடங்களில் உள்ள 5 மார்க் கேள்விகள் 20ல் 4 கேள்விகளுக்கான பதிலை எழுதி விடலாம். 1, 3, 8 பாடங்களில் உள்ள கணக்குகளில் 2 கணக்குகளை செய்து விடலாம். 10 மார்க் கேள்விகளில் தேவையான இடத்தில் படமும், படத்திற்குரிய விளக்கமும் இருந்தால் முழு மார்க் கிடைக்கும். தாவரவியல்: ஏ.பழனிவேல்(அரசு மேல்நிலைப்பள்ளி, சில்லமரத்துப்பட்டி): மூன்று மார்க் வினாக்களுக்கான பதில் வரையறை புத்தகத்தில் உள்ளது போன்று மாறாமல் இருக்க வேண்டும். சொந்த நடையில் எழுதக் கூடாது. படம் நன்றாக வரையும் பழக்கமுள்ளவர்கள் படம் உள்ள வினாக்களுக்கு விடையளிக்கலாம். மற்றவர்கள் படம் இல்லாத வினாக்களை தேர்வு செய்ய வேண்டும். 5, 10 மார்க் வினாக்களுக்கு மாணவர்கள் சொந்த நடையில் மையக்கருத்து மாறாமல் விடை எழுதலாம். விலங்கியல்: எம்.செல்வம்(எஸ்.யு.எம்., மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி): உயிரியியல் விலங்கியல் பகுதியில் உள்ள 7 பாடங்களில் முதல் 6 பாடங்களை முழு கவனத்துடன் படித்தால் கூடுதல் மார்க் பெற முடியும். விலங்கியல் பகுதியில் உள்ள 8 பாடங்களில் முதல் 6 பாடங்களை நன்கு படிக்க வேண்டும். 10 மார்க் வினாக்களுக்கான பதிலில் வரையறை, படம், விளக்கம் ஆகிய மூன்றும் தேவைப்பட்டால் கண்டிப்பாக எழுத வேண்டும்.