உள்ளூர் செய்திகள்

மழைக்கால பாதுகாப்பு பள்ளிகளுக்கு அறிவுரை

திருப்பூர்: வடகிழக்கு பருவமழை தொடர்வதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மழைக்காலத்தில், மாணவ, மாணவியர் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. மேற்கூரை தண்ணீர் வெளியேறும் குழாயில், இலை, தழைகளால் அடைப்பு ஏற்பட்டிருந்தால், அதை நீக்கி, மழைநீரை வெளியேற்ற வேண்டும்.வகுப்பறை மேற்கூரை (சிலீங்) விரிசல், உடைப்பு, கான்கிரீட் பெயர்ந்திருந்தால், உடனடியாக சரி செய்ய வேண்டும்.பள்ளி வளாகத்தில், மாணவர்களுக்கு இடையூறாக, மழைநீர் தேக்கம் இருக்கக்கூடாது; தேங்கிய நீரை, மின்மோட்டார் வைத்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடர்மழையால் ஆறு, ஏரி, குளம், குட்டை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், அதிகளவில் நீர் காணப்படும். நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு மாணவ, மாணவியர் செல்லக்கூடாது என, அறிவுரை வழங்க வேண்டும். உணவு இடைவேளை, காலை மற்றும் மாலை நேரங்களில், மாணவர்கள் பள்ளியில் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.பள்ளிக்கு வரும்போதும், வீடுகளுக்கு செல்லும்போதும், பாதுகாப்பாக சென்று வரவும்; தலைமை பண்புள்ள மாணவர்களை, வழிகாட்டியாக செல்லவும் அறிவுறுத்த வேண்டும்.மழைக்காலங்களில், மின் சாதனங்களில் இருந்து, மின் கசிவு ஏற்படும் ஆபத்து உள்ளது; பள்ளிகளில், பழுதான மின்சாதனங்கள் இருப்பின், அவற்றை சரிசெய்ய வேண்டும்.பள்ளி மற்றும் வீடுகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகள், கழிவுநீர் தேக்க தொட்டிகள் அருகே, மாணவர்கள் செல்வதை தவிர்க்க, அறிவுறுத்த வேண்டும்.மழையில் நனைவதால் ஏற்படும் நோய்கள், இடி மின்னலால் ஏற்படும் ஆபத்து, மரங்கள், மின்கம்பங்கள் கீழ் நிற்கக்கூடாது என, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மழைக்காலத்தில், தொற்றுநோய் பரவாமல் இருக்க, நன்கு காய்ச்சிய வடிகட்டிய நீரை குடிக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்