அரசுப் பள்ளிகளில் திருட்டு அதிகரிப்பு
கோவை: அரசுப் பள்ளிகளில் சமீப காலமாக திருட்டுக் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கல்வி வளர்ச்சிக்கென வழங்கப்பட்டுள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை குறி வைத்து நடக்கும் இந்த திருட்டை தடுக்க, அரசோ காவல்துறையோ எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருப்பதால், ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உ<யர்த்த அரசு எடுக்கும் முயற்சிகள் பயனற்றுப் போகும் நிலைமை உருவாகி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறைச் சூழல் தலை கீழாக மாறி விட்டது. கரும்பலகை, சாக்பீஸ், புத்தகம் வைத்து கத்திக் கத்தி பாடம் சொல்லி தந்த நிலைமை மாறி விட்டது. மாணவர்களை மையமாக கொண்ட செயல்வழிக் கற்றல் எனும் ஆரோக்கியமான கற்பித்தல் முறை நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு கற்பிக்க டி.வி.டி., கலர் ‘டிவி’, புரொஜக்டர், வெப் காமிரா, என நவீன தொழில் நுட்ப வசதியுடன் தற்போது கற்பித்தல் நடக்கிறது. மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்க டி.வி.டி.,க்கள் மூலம் ஆங்கில உரையாடல் முறை கற்பிக்கப்படுகிறது. சென்னை பள்ளிக் கல்வித் துறையுடன் நேரடியாக தகவல்களை பரிமாற, வட்டார வள மையங்களில் ‘வெப் காமிரா’ பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் அவ்வப்போது வெளியிடும் சுற்றறிக்கைகளை பெற, கம்ப்யூட்டர்களில் இ-மெயில் வசதி செய்து தரப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் இந்த வசதிகள் வழங்கப்பட்டாலும், அனைத்து பள்ளிகளிலும் இவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இப்பள்ளிகளில் வாட்ச்மேன், அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படாததுதான் காரணம். குறிப்பாக ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைந்திருப்பதால், திருடர்கள் சாவகாசமாக கதவுகளை உடைத்து பயமில்லாமல் பொருட்களை அள்ளிச் செல்கின்றனர். பிச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் 15 நாட்களுக்கு முன் புகுந்த திருடர்கள், அங்கிருந்த எட்டு அரிசி மூட்டைகள், ஒரு ‘லேப் டாப்’ கம்ப்யூட்டரை கொண்டு சென்றனர். கோவில்பாளையம் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குள் புகுந்த திருடர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர், வெப் காமிராவை கொண்டு சென்றனர். மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் இருந்தபடி சென்னையில் உள்ள கல்வி அலுவலர்களுடன் உரையாட ‘எஜூசாட்’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ‘எஜூசாட்’ கேபிள் ஒயர்களை திருடர்கள் துண்டித்துச் சென்றனர். கேபிள்களின் தரத்தை வைத்து இம்மையத்தில் அதிநவீன பொருட்கள் இருப்பதை அறிந்து கொண்ட திருடர்கள், நான்கைந்து நாட்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியர் கதவின் பூட்டை கடப்பாறையால் நெம்பி திறந்துள்ளனர். உள்ளே இருந்த ஏழு ஸ்டீல் பீரோக்களின் லாக்கர்களை உடைத்து திறந்து, அங்கிருந்த ‘டிவிடி பிளேயரை’ அள்ளிச் சென்றனர். இதே வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டார வள மையத்தில் இருந்த மேலும் ஆறு பீரோக்களை உடைத்து திறந்து, ‘எஜூசாட் காமிரா’, ஒரு சாதாரண காமிரா, 1,500 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். காப்பீடு செய்ய திட்டம்: சி.இ.ஓ., இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்டதற்கு, “அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள கம்ப்யூட்டர், டி.வி.டி., உள்ளிட்ட எலக்டிரானிக் உபகரணங்களை காப்பீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள பொருட்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதே போல் கோவை மாவட்ட அரசுப் பள்ளிகளில் உள்ள எலக்டிரானிக் உபகரணங்களும் இன்னும் பத்து நாட்களுக்குள் 400 ரூபாய்க்கு காப்பீடு செய்யப்படும். இது தொடர்பாக முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது,” என்றார். காப்பீடு செய்யும் திட்டம் மூலம் திருட்டுப் போன பொருட்களுக்கான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். அதே விலையில் மீண்டும் பொருட்களை வாங்கி பள்ளியில் வைத்தால், மறுபடியும் திருட்டுப் போகாமல் இருக்க அரசு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. திருட்டை நிரந்தரமாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், அதே பள்ளியில் மீண்டும் புதிய பொருட்களை வாங்கி வைப்பதன் மூலம், திருடர்களை மீண்டும் மீண்டும் திருட தூண்டுகிறது பள்ளிக் கல்வித் துறை. காப்பீடுத் திட்டத்தை கைவிட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் தொகுப்பூதிய அடிப்படையிலாவது இரவு காவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.