பள்ளியில் இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வுக்கூடம்
திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோள் ஆராய்ச்சிக்கூடம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இப்பள்ளியில் பயிலும், 11, 12ம்வகுப்பு மாணவிகள் 10 பேர் கடந்த 2022 ஆக., 10ல் ஸ்பேஸ் கிட் நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோவின் ஆசாதி சாட் - 1 என்ற செயற்கைக்கோளை அனுப்புவதற்குரிய மின்னணு உபகரணங்கள் தயாரிப்பில் பங்கேற்றனர்.தொடர்ந்து 2023, பிப்., 7ல் ஆசாதி சாட் - 2 செயற்கைகோள் விண்ணில் பாய்வதற்கும் மின்னணு உபகரணங்கள் தயாரித்தனர். இந்த மாணவிகளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னைக்கு வரவழைத்து பாராட்டினார். தமிழக அரசும் மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது.இஸ்ரோ நிறுவனம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், செயற்கைக்கோள் தயாரிப்பதற்கான தொழிற் (ஆராய்ச்சி) கூடம் அமைக்க இடத்தை தேர்வு செய்துள்ளதாகவும், இந்த கூடத்தில் இப்பள்ளி மாணவியர் மட்டுமின்றி, பிற பள்ளிகளின்சிறந்த மாணவர்களும் தங்கள் திறனை மேம்படுத்தி, வளர்ச்சி அடைய செய்யலாம் என அறிவியல் ஆசிரியை சந்தியா தெரிவித்தார். தமிழகத்திலேயே இப்பள்ளிக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சிக் கூடம் அமைப்பதற்கு இஸ்ரோ நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது வரப்பிரசாதமாக உள்ளது என தலைமை ஆசிரியை திலகவதி, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.