மருத்துவ காலியிடம் தெரிவிக்க உத்தரவு
தமிழகத்தில், அரசு ஒதுக்கீட்டில், 6,326 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,768 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன.சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,509 எம்.பி.பி.எஸ்., 395 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இதற்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கையில் அனைத்து இடங்களும் நிரம்பின. இடங்கள் பெற்ற மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில் கடந்த 14ம் தேதிக்குள் சேர மருத்துவ கல்வி இயக்ககம் அறிவுறுத்தி இருந்தது.அதன்படி கல்லுாரிகளில் மாணவர் சேர்ந்துள்ளனர். ஒருசில மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில் சேரவில்லை என கூறப்படுகிறது. எனவே, காலியாக உள்ள இடங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவ மாணவர் தேர்வு குழு செயலர் முத்துசெல்வன் கூறுகையில், மருத்துவ கல்லுாரிகளில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள் குறித்த விபரங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இதன் விபரங்கள் கிடைத்தப்பின், காலியிடங்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும், என்றார்.