தசரா: வெளிநாட்டு கலைஞர்களும் விண்ணப்பம்
மைசூரு: நடப்பாண்டு தசராவின் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க, கர்நாடகா மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் தாமாக முன்வந்து விண்ணப்பித்து வருகின்றனர், என கன்னடம், கலாசார துறை உதவி இயக்குனர் சுதர்சன் தெரிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவை ஒட்டி மைசூரு அரண்மனை வளாகம், ஹுன்சூர் சாலையில் உள்ள கலாமந்திர், ஜெகன்மோகன் அரண்மனை மண்டபம், குவெம்பு நகரில் உள்ள கணபாரதி, ஜே.எல்.பி., சாலையில் உள்ள நாதபிரம்ம சங்கீத சபா, டவுன் ஹால் ஆகிய இடங்களில் கலாசார, இசை நிகழ்ச்சிகள் நடக்கும். இத்துடன் கலாமந்திர், சிறிய கடிகார கோபுரம் வளாகத்தில் உள்ள சிறிய திரையரங்கு முன், மாலையில் கலாசார நிகழ்ச்சிகளும் நடக்கும்.இந்நிலையில் மைசூரில் கன்னடம், கலாசார துறை உதவி இயக்குனர் சுதர்சன் அளித்த பேட்டி:தசரா நிறைவு நாளில் நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க வீரகாசே, கட்டி குனிதா, கரடி குனிதா, கன்சாலே, நந்தித்வஜா, நகரி, நாட்டுப்புற நடனம் உட்பட பல்வேறு நடன குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இதற்காக ஏராளமான கலைஞர்கள், கலை குழுவினர் விண்ணப்பித்து வருகின்றனர். இம்முறை கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க, கர்நாடகாவை சேர்ந்த கலைஞர்கள் மட்டுமின்றி, கேரளா, தமிழகம், மஹாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளில் இருந்தும் விண்ணப்பித்துள்ளனர்.தசராவில் பங்கேற்கும் பல கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி தேசிய, சர்வதேச அளவில் செல்ல இது ஒரு களமாக உள்ளது. இங்கு வழங்கப்படும் சான்றிதழ், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.