நெய்தல் புத்தக திருவிழா நிறைவு
கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் 11 நாட்கள் நடந்த நெய்தல் புத்தக திருவிழா நிறைவு பெற்றது.கடலுார், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது. தினமும், பேச்சாளர்களின் சொற்பொழிவு, கருத்தரங்கம், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 11 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நேற்று நிறைவு பெற்றது.கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். எஸ்.பி., ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா முன்னிலை வகித்தனர். விழாவில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் பேசுகையில், மாணவர்களுக்கு புத்தகத்தை படிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தக திருவிழா நடத்தப்பட்டது. இதனை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 48 அரசு பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 500 மாணவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார்.