எச்.ஏ.எல்.,லில் படிக்க விரும்பிய பயங்கரவாதி
பெங்களூரு: மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாதி, எச்.ஏ.எல்.,லில் விமான மேலாண்மை படிப்பு படிக்க, விண்ணப்பித்தது என்.ஐ.ஏ., விசாரணையில் தெரியவந்துள்ளது.மங்களூரு கங்கனாடியில் கடந்த ஆண்டு, ஆட்டோவில் குக்கர் குண்டுவெடித்தது. இந்த வழக்கில் ஷிவமொகாவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் முகமது ஷாரிக், மாஸ் முனீர் அகமது, தட்சிண கன்னடாவின் மஜின் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.ஷிவமொகா துங்கா ஆற்றங்கரையில், வெடிகுண்டு வீசி ஒத்திகையில் ஈடுபட்டதுடன், ஒரு வாலிபரை கத்தியால் குத்திய வழக்கிலும் மாஸ் முனீர் அகமதுவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கைதான பயங்கரவாதிகள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஜாமின் கேட்டு மஜின் அப்துல் ரஹ்மான், பெங்களூரு என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். மனு மீது நேற்று விசாரணை நடந்தது. மனுதாரருக்கு ஜாமின் வழங்க, என்.ஐ.ஏ., வக்கீல் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.அவர் கூறுகையில், &'&'மாஸ் முனீர் அகமது, எச்.ஏ.எல்., அகாடமியில், விமான மேலாண்மை படிப்பை படிக்க, விண்ணப்பித்திருந்தார். இந்த படிப்பை முடித்து, எச்.ஏ.எல்.,லில் வேலைக்கு சேர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை, சிதைக்க சதி செய்துள்ளார். மாஸ் முனீர் அகமதுவின் சமூக வலைத்தள கணக்குகள், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, ஆவணங்கள் வாயிலாக, இந்த தகவல் கிடைத்துள்ளது,&'&' என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, மனு மீதான விசாரணையை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.