பழங்குடியினரின் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி
குன்னுார்: குன்னூர் அரசு மாதிரி பள்ளியில் பழங்குடியினர் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி நடந்தது.மத்திய அரசின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், தமிழக கல்வி துறை மூலம், மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி, குன்னுார் வசம்பள்ளம் பகுதியில் அரசு மாதிரி பள்ளி துவக்கப்பட்டு, கல்வி நுண்கலை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்த விளங்கும் மாணவர்கள் தங்க வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.பள்ளியில் நடந்த பாரம்பரிய கண்காட்சியில், பா.ஜ., விவசாய பிரிவு மாநில துணைத்தலைவர் சவுந்தரபாண்டியன் பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு பழங்குடியினரின் மேம்பாடு முக்கியம் என்ற பாரத பிரதமரின் எண்ணத்தின் அடிப்படையில் பழங்குடியினர் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. பாரத பாரம்பரியத்தை தொடர்ந்து காப்பாற்ற வேண்டியது அனைவரின் கடமை, என்றார்.பா.ஜ., மாவட்ட துணை தலைவர் இளைஞரணி பொறுப்பாளர் பார்த்தீபன், சமூக ஆர்வலர் உஷா பிராங்லின், தலைமையாசிரியர் சீனிவாசன் உட்பட பலர் பேசினர். பழங்குடியினரின் பாரம்பரிய கண்காட்சியில், கம்பு, ராகி கேழ்வரகு, தினை உட்பட பழங்குடியினரின் பல்வேறு உணவு வகைகள் தயார் செய்து காட்சி படுத்தப்பட்டன.ஊட்டி டாக்குமென்டேஷன் சென்டர் சார்பில் பழங்குடியினரின் புகைப்பட கண்காட்சி இடம் பெற்றது. பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர் ராஜேஷின் பழங்கால நாணயங்கள், ஸ்டாம்ப் உட்பட பழமை வாய்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.கண்காட்சியில் இயற்கையான செடிகள் மற்றும் புல் வகைகளில் அரங்குகளை அலங்கரித்து வைத்திருந்தனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள், மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.