பணியாளர் வீட்டில் அங்கன்வாடி மையம்
காரைக்குடி: காரைக்குடியில், பணியாளர் வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.குழந்தைகளுக்கு, ஆரம்ப கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திடும் நோக்கில் அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டது. சாக்கோட்டை வட்டாரத்தில் 171 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.இதில், காரைக்குடி ரயில்வே பீடர் ரோடு, பழைய அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டது. இங்கு, காளவாய்பொட்டல், உதயம் நகர் ஆலங்குடியார் பள்ளி வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்தனர்.இக்கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், குழந்தைகளுக்கு அபாயம்நிலவுவதாக புகார் எழுந்தது. இதனால், அங்கன்வாடி மையம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டதோடு அங்கன்வாடி பணியாளரின் வீட்டிலேயே மையம் செயல்பட்டு வருகிறது.வீட்டில், போதிய இடவசதி இல்லாததோடு குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருவதாக பெற்றோர்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.கவுன்சிலர் பிரகாஷ் கூறுகையில், இம்மையத்தில் 40 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். வீட்டில் செயல்படுவதால் 15 குழந்தைகள் மட்டுமே தற்போது படித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் உதவியாளர் இல்லாமல் ஒரே ஒரு பணியாளர் மட்டுமே உள்ளார்.புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குழந்தைகளின் பாதுகாப்பை கருதி உடனடியாக புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.