ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வரும், மார்ச், 3 ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்தாண்டை போல இந்தாண்டும், பொதுத்தேர்வுக்கு பணி ஒதுக்குவதில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும், ஆசிரியைகளுக்கு தொலைதுாரம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆசிரியர்கள் கூறுகையில், எங்கள் மீதான வெறுப்பை கைவிட்டு, தொலைதுார பணி ஒதுக்கியதை நீக்கி குறைந்த துாரத்தில் பணி ஒதுக்க வேண்டும். பல மாவட்டங்களில் தேர்வுக்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. கோவை மாவட்டத்தில் மட்டும், இன்னும் துவங்கவில்லை. 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, 40 - 60 கி.மீ., க்கு அப்பால் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டும், என்றனர்.இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.