ஆன்லைனில் பணம் இழந்தால் 24 மணி நேரத்தில் புகார் அவசியம்
சென்னை: 'ஆன்லைன்' வாயிலாக, சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை இழந்தால், பாதிக்கப்பட்ட நபர்கள், 1930 என்ற எண்ணை, 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு, புகார் பதிவு செய்ய வேண்டும்' என, மாநில சைபர் குற்றப்பிரிவு டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது: சைபர் குற்றவாளிகளிடம், 'ஆன்லைன்' வாயிலாக இழந்த பணத்தை முடக்கி வைக்கவும், அவற்றை மீட்கவும், பாதிக்கப்பட்ட நபர்கள், இரண்டு மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு, புகார் அளிக்க வேண்டியது, மிகவும் அவசியம்.இதை நாங்கள் 'கோல்டன் ஹவர்ஸ்' என, அழைக்கிறோம். குறைந்தபட்சம், 24 மணி நேரத்திற்குள்ளாவது, 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில், புகார்களை பதிவு செய்ய வேண்டும்.சைபர் குற்றவாளிகள், மோசடி செய்த பணத்தை மிக வேகமாக, அடுத்தடுத்த வங்கி கணக்குகளுக்கு மாற்றி விடுகின்றனர். பண பரிவர்த்தனையை, போலீசார் தடுப்பதற்கு முன், 'ஆன்லைன்' வாயிலாக பொருட்கள் வாங்கி விடுகின்றனர். கிரிப்டோ கரன்சிகளாகவும் மாற்றி விடுகின்றனர். இதனால், அந்த பணத்தை மீட்பது சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.