சட்டப் படிப்பில் சேர 60 சதவீத மதிப்பெண்: ஐகோர்ட் பரிந்துரை
பி.எல்., சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க சந்தோஷ் அந்தோணி வரீத் என்பவர் இந்த ஆண்டு விண்ணப்பம் பெற்றார். சட்டக் கல்லூரியில் சேர, 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என, விளக்க குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. அதாவது, 79ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி, அதற்கு பின் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சந்தோஷ் பிறந்த தேதி 79ம் ஆண்டு மே 23ம் தேதி.வயது வரம்பில் எட்டு நாள்கள் அதிகம் இருந்ததால், அவரால் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே, வயது நிர்ணயம் செய்ததை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சந்தோஷ் மனு தாக்கல் செய்தார். வயது வரம்பை தளர்த்தி, தனது விண்ணப்பத்தை ஏற்க வேண்டும் என கோரினார்.மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை சார்பில், வக்கீல் ராமகண்ணன் வாதாடினார். நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:எந்த படிப்பில் சேர வேண்டுமானாலும், வயது வரம்பு தேவை. இளைஞர்களின் மனதை நல்வழிப் படுத்தலாம். வயதானவர்களை அவ்வளவு எளிதில் சரி செய்ய முடியாது. வயது வரம்பை நிர்ணயம் செய்வதன் மூலம், மாணவர்கள் மத்தியில் ஒரே மாதிரியான நிலையை கொண்டு வர முடியும்.பல்கலைக்கழகங்கள், பார் கவுன்சில் உடன் விரிவாக விவாதித்து, சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்த இந்த வயது வரம்பு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் சார்பில் பல்கலைக்கு விண்ணப்பம் அளிக்க அனுமதி கோரப்பட்டது.எனவே, தனது பிரச்னைகளை விவரித்து, ஒரு வாரத்துக்குள் சட்டப் பல்கலைக்கு மனுதாரர் மனு அளிக்க வேண்டும். அதை சட்டப்படி, பல்கலைக்கழகம் பைசல் செய்ய வேண்டும். சட்டக் கல்வியை மேம்படுத்த இப்போது நேரம் வந்துள்ளது. அதன் முதல்கட்டம் தான், வயது வரம்பு கொண்டு வரப்பட்டது.சட்டக் கல்லூரிகளில் சரியான, நல்ல திறமையான மாணவர்களை சேர்ப்பதன் மூலம், அவர்கள் ஜனநாயகத்தில் நீதி நிர்வாகத்தில் முக்கிய பங்காற்ற முடியும். எனவே, சட்டக் கல்லூரிகளில் சேர விரும்புபவர்களின் பின்னணியை ஆராய்வது நன்றாக இருக்கும். இதனால், சில தீய சக்திகள் இந்த சட்டத் தொழிலில் ஈடுபடுவது தடுக்கப்படும். சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசுக்கும், பார் கவுன்சிலுக்கும் சில பரிந்துரைகளை அளிக்கிறேன். இந்த பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளலாம்.* தேசிய சட்டக் கல்லூரி போல், சட்டக் கல்லூரிகளில் வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவர்களின் வருகை, சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்.* காலை, மாலையில் வகுப்புகள் நடக்க வேண்டும். கல்லூரி நேரத்தை ஆறு மணி நேரமாக உயர்த்த வேண்டும்.* சட்டக் கல்லூரியில் சேர குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயிக்கலாம். இதனால், திறமைவாய்ந்த, அறிவார்ந்த மாணவர்கள் இதில் சேர்வர். மேலும், சட்டப் படிப்பின் தரம் மேம்படும். அதிக மதிப்பெண் நிர்ணயம் செய்வதன் மூலம், குறிப்பிட்ட இடங்களில் மாணவர்கள் சேரவில்லை என்றாலும், குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை அந்த இடங்களில் சேர்க்கக் கூடாது. இதனால், சட்டக் கல்லூரிக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.* தேவைப்பட்டால் மாணவர்களின் பின்னணியை, படிப்பில் சேர்வதற்கு முன் சரிபார்க்க வேண்டும்.* தகுதியான பேராசிரியர், விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும். நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கல்லூரிகளில் ஏற்படுத்த வேண்டும். அடிப்படை வசதியற்ற, தரமான கல்வி வழங்க முடியாத கல்லூரிகளை மூட வேண்டும். புதிய கல்லூரிகளை திறக்க வேண்டிய அவசியமில்லை.* படிப்படியாக மூன்று ஆண்டு சட்டப் படிப்பை ரத்து செய்ய வேண்டும். இதற்கு மாற்றாக ஐந்து ஆண்டு சட்டப் படிப்பு உள்ளது.* பாடத் திட்டத்தை நவீனமாக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள், சீனியர் வக்கீல்கள், கல்வியாளர்களை, பாடத்திட்டம் உருவாக்க பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்.* தார்மீக நெறிகளை மாணவர்களின் மனதில் ஊட்ட வேண்டும். சட்டத் தொழிலுக்கு இது அவசியமாகிறது.* கோர்ட்டுக்கு செல்வது, சமூக பணிகள் ஆற்றுவது, சட்ட கருத்தரங்குகளில் கலந்து கொள்வது ஆகியவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.* கிரிமினல் வழக்குகளில் புலன் விசாரணை செய்வது குறித்து சொற்பொழிவு நிகழ்த்த, போலீஸ் அதிகாரிகளை அழைக்கலாம். போலீசாருக்கும், சட்ட கல்லூரி மாணவர்களுக்கும் இடையேயான நல்லுறவினால், அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் தடுக்கப்படும். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.