ஏ.இ.இ.ஓ., கவுன்சிலிங் எப்போது?
உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு, கவுன்சிலிங்கை இன்னும் நடத்தாமல் இருப்பது, ஆசிரியர்களிடையே சலசலப்பை எழுப்பியுள்ளது. இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தொடக்க கல்வித் துறை ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அனைத்து வகையான, கவுன்சிலிங்கையும் இந்நேரம் முடித்திருக்க வேண்டும். ஆனால், ஏ.இ.இ.ஓ., பதவி உயர்வு கவுன்சிலிங் மட்டும் இதுவரை நடத்தாமல், உள்ளாட்சித் தேர்தல் காரணத்தைக் காட்டி, நிறுத்தி வைத்திருந்தனர்" என்றார். மேலும், "அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருப்பவர்களில், பணி சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். வெளிப்படையான முறையிலும், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமலும் பதவி உயர்வு வழங்க, துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.