ஐந்து ஆண்டுகளில் 100 ராக்கெட்கள் தான் அடுத்த இலக்கு!
சென்னை: அடுத்த ஐந்தாண்டுகளில், 100 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த, இஸ்ரோ ஆயத்தமாகி வருகிறது என இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.ஜி.எஸ்.எல்.வி., - எப் 15 வெற்றியை தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், அவர் கூறியதாவது:விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய சாதனையை, இஸ்ரோ எட்டியுள்ளது. நுாறு ராக்கெட் திட்டங்களை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள்.ஒப்புதல்மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சந்திரயான் 4, சந்திரயான் 5, செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கும் திட்டம், வெள்ளி கோள் ஆய்வு திட்டம் என, ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட பல திட்டங்களை, அடுத்தடுத்து முன்னெடுக்க உள்ளோம்.விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை, இந்தாண்டிலேயே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்துக்கு செயல் வடிவம் அளிப்பதில், மேம்பட்ட நிலை எட்டப்பட்டுள்ளது.அதை விண்ணில் செலுத்துவதற்கு முன்னதாக, ஆளில்லா விண்கலன்களை அனுப்பி பரிசோதிக்கும் மூன்று திட்டங்கள், செயல்படுத்தப்பட உள்ளன.ககன்யான் கலன்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான அதிநவீன எல்.வி.எம்., - 3 ராக்கெட் நுட்பம், ஏற்கனவே இஸ்ரோ வசம் உள்ளது. புதிய தலைமுறை தொழில்நுட்ப வாகனமான, என்.ஜி.எல்.வி., என்ற ராக்கெட்டை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.என்.ஜி.எல்.வி,. ராக்கெட், 91 மீட்டர் உயரம் கொண்டது. தற்போதைய ஜி.எஸ்.எல்.வி,, மாக் 3 வகை ராக்கெட்டுகள், அதன் உயரத்தில் பாதி அளவே உள்ளன. நிலவுக்கு மனிதர்களை அனுப்பவும், விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கவும், என்.ஜி.எல்.வி., ராக்கெட் நுட்பங்கள் அவசியம்.இந்த ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வாயிலாக, 2,250 கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் விண்ணில் செலுத்த முடியும்; என்.ஜி.எல்.வி., ராக்கெட் வாயிலாக, 30,000 கிலோ ஆய்வுக்கருவிகள், செயற்கைக்கோள்களை அனுப்பலாம்.ஸ்ரீஹரிகோட்டாவில், இப்போது செயல்பாட்டில் உள்ள இரு ஏவுதளங்களும், என்.ஜி.எல்.வி., ராக்கெட்டை செலுத்துவதற்கு உகந்ததாக இருக்காது.சாதனைசமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த மூன்றாவது ஏவுதளம், 4,000 கோடி ரூபாயில், என்.ஜி.எல்.வி., ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வசதிகளுடன் அடுத்த, நான்கு ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்.அதேபோல், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இஸ்ரோ சார்பில், 100 ராக்கெட் திட்டங்கள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதன் வாயிலாக, 548 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன.மூன்று சந்திரயான் திட்டங்கள், ஆதித்யா, மங்கள்யான் என பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 100 ராக்கெட் திட்டங்களை செயல்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.