‘உயர்கல்வி பெறுவோர் 11 சதவீதம் மட்டுமே’
கோவை: “உயர்கல்வி கற்க தகுதியுள்ளவர்களில், 11 சதவீதம் பேருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. இந்த எண்ணிக்கையை 40 - 50 சதவீதமாக உயர்த்த ஒவ்வொரு இந்தியரும் பாடுபட வேண்டும்,” என பல்கலை மானியக் குழுவின் இணைச் செயலர் டோக்ரா பேசினார். ‘கே.ஜி.ஐ.எஸ்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி’ கல்லூரியின் ஆறாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், பல்கலை மானியக் குழுவின்(யு.ஜி.சி.,) இணைச் செயலர் டோக்ரா பேசியதாவது: கல்வி கற்பதற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஆளுமைத் திறனை வளர்ப்பதற்கும் உயர்கல்வி உதவுகிறது. படிப்பை முடித்தவுடன், வேலை பெற்றுத் தரும் கல்லூரிகளில் படிப்பதையே இன்று மாணவர்கள் விரும்புகின்றனர். 21வது நூற்றாண்டில் இளைஞர்களை உயர்கல்வியில் திறன் மிக்கவர்களாகவும், தொழில்நுட்பத் திறன் பெற்றவர்களாகவும் மாற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது. கற்றவர்களாக, கற்பவராக, கவனிப்பவராக அல்லது இவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவுபவர்களாக ஒவ்வொரு மாணவரும் இருக்க வேண்டும். உலகம் முழுவதும் ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக உயர்கல்வி கற்பவர், பிற்காலத்தில் நல்ல வருமானம் ஈட்டுபவராக மாறுகிறார். இந்தியாவில் இன்று உயர்கல்வி கற்க தகுதியுள்ளவர்களில், 11 சதவீதம் பேருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. உயர்கல்வி கற்போர் எண்ணிக்கையை 40 - 50 சதவீதமாக உயர்த்த நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்; மீதமுள்ளவர்கள் தொழிற்கல்வி கற்றவர்களாக மாற வேண்டும். இவ்வாறு டோக்ரா பேசினார்.