சென்னையில் இகான் 2025 கருத்தரங்கு தொடக்கம்
சென்னை: இந்திய கால்-கை வலிப்பு சங்கம் (ஐஇஎஸ்) மற்றும் இந்திய கால்-கை வலிப்பு அமைப்பு (ஐஇஏ) இணைந்து, வருடாந்திர கருத்தரங்கான இகான் 2025-ஐ சென்னையில் துவக்கியுள்ளது. இந்த மாநாடு ஆகஸ்ட் 21 முதல் 24 வரை லீலா பேலஸில் நடைபெறுகிறது.இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முன்னணி நரம்பியல் நிபுணர்கள், வலிப்பு நோய் சிறப்பு மருத்துவர்கள், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். கால்-கை வலிப்பு நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் புதிய ஆராய்ச்சிகள் குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விரிவான பேச்சுகள், பட்டறைகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல் மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடைபெறவுள்ளன.கருத்தரங்கின் தொடக்க விழா நேற்று (ஆகஸ்ட் 22) மாலை 6 மணிக்கு நடைபெற்றது. முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். ஏற்பாட்டுத் தலைவர் டாக்டர் வி. நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். ஐஇஎஸ் தலைவர் டாக்டர் சரத் சந்திரா, ஐஇஏ தலைவர் டாக்டர் சதீஷ்சந்திரா உள்ளிட்டோர் உரையாற்றினர். மேலும் நினைவுப் பரிசு மற்றும் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.“சென்னையில் இகான் 2025 நடைபெறுவது பெருமை. இது அறிவியல் பரிமாற்றத்திற்கும், இந்தியாவில் கால்-கை வலிப்பு நோய் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தவும் முக்கிய மேடையாக இருக்கும்” என்று அமைப்புச் செயலாளர் டாக்டர் மால்கம் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.