கீழடியை பார்வையிட்ட 4.5 லட்சம் பார்வையாளர்கள்
கீழடி: கீழடி அருங்காட்சியகத்தை கடந்த ஒன்பது மாதங்களில் நான்கரை லட்சம் பார்வையாளர்கள் அகழாய்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை கண்டு ரசித்துள்ளனர்.கீழடியில் இரண்டு ஏக்கரில் பத்து கட்டட தொகுதிகளுடன் 18 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு அகழாய்வில் கண்டறியப்பட்ட 13 ஆயிரத்து 800 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு மார்ச் 5ம் தேதி அருங்காட்சியகம் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.ஏப்ரல் 1ம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. உள்ளூர் முதல் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்து இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை பார்வையிட்டனர்.நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 500 பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். அதிகபட்சமாக அரையாண்டு விடுமுறையை ஒட்டி ஒரு வாரத்தில் மட்டும் 40 ஆயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.மார்ச் 5 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நான்கரை லட்சம் பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர்.