காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,000 பேருக்கு பாடப்புத்தகங்கள்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, எட்டாயிரம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எட்டாயிரம் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள், ஆறாயிரம் பேருக்கு நோட்டுப்புத்தகங்கள், நான்காயிரம் பேருக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. பொது வினியோகக் கடைகள் அனைத்தும் இயங்கி வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் துப்புரவுப் பணிகள், பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட, 130 மருத்துவ முகாம்களில், 36 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். நிலவேம்பு குடிநீர், 31 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மழையால் செயல் இழந்த மின்மாற்றிகள், மறுசீரமைப்பு செய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 35 குளங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுப்பணி துறையினர் மூலம், 520 இடங்களில் குளங்கள் சீரமைக்கப்படுகின்றன. 633 ஊராட்சிகளில், ஐந்தாயிரம் நீர்த்தேக்க தொட்டிகளில், குளோரின் கலந்து குடிநீர் வழங்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.