குரூப்-1ல் 53 பேர் தேர்ச்சி சைதை துரைசாமி வாழ்த்து
சென்னை: மனிதநேய அறக்கட்டளை வாயிலாக படித்து, குரூப் - 1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் 53 பேருக்கு, சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சைதை துரைசாமியால் கடந்த 2005ம் ஆண்டு, மனிதநேய அறக்கட்டளை துவங்கப்பட்டது. சமுதாயம் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவியருக்கு மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தில், பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் பல்வேறு அரசு பணிகளில் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டிற்கான, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 95 காலி பணியிடங்களுக்கு, 2,162 பேர் முதன்மை தேர்வு எழுதும் வாய்ப்பை பெற்றனர்.முதன்மைத் தேர்வுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த முதன்மை தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், மாணவர்கள் 26 பேர், மாணவியர் 27 பேர் என, மொத்தம் 53 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, மனிதநேய அறக்கட்டளை நிறுவன தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.