உதவித்தொகையை ரூ.10,000 ஆக உயர்த்திய புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி: புதுச்சேரி, ராஜிவ்காந்தி கால்நடை அரசு மருத்துவக் கல்லுாரியின் 24ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயகுமார் தலைமை வகித்தார். விழாவில் 2017-22ம் ஆண்டு படித்த 59 மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பட்டம் மற்றும் பதக்கம் வழங்கி பேசியதாவது:கடந்த காலங்களில் கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்தது. தற்போது அனைத்து குடும்பத்தினரும் படிப்பதற்கு வழி செய்துள்ளோம். பள்ளி படிப்போடு நின்றுவிடாமல், உயர்கல்வியை தொடரவும் வழிவகை செய்துள்ளோம். பிளஸ் 2 படித்த மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை படிக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம். பள்ளி முதல் கல்லுாரி வரை இலவச கல்வி அளிக்கிறோம்.உயர் கல்விக்கு சென்டாக்கில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, அரசே கல்வி கட்டணத்தை செலுத்தி வருகிறது. தனியார் கல்லுாரிகள், மாணவர்களிடம் கட்டணத்தை கேட்க வேண்டாம். அரசு கட்டாயம் பணம் தரும். இதுதொடர்பாக கல்லுாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.கால்நடை டாக்டர்களுக்கு அதிகளவில் தேவை உள்ளது. அரசு கால்நடைத் துறை காலியிடங்களில் மருத்துவர்கள் சேருகின்றனர். ஆனால், சில மாதங்களில் வெளிநாடு, வெளி மாநிலத்துக்கு சென்று விடுகின்றனர். இதனால், மாநிலத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, புதுச்சேரிக்கு பெருமை சேர்க்க வேண்டும். இந்தக் கல்லுாரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும். கால்நடை கல்லுாரி இறுதியாண்டு இன்டன்ஷிப் மாணவர்களுக்கு பயிற்சி உதவித்தொகை 6,000த்தில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்சரவணன்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., இத்தாலிய பேராசிரியர் நிக்கோலா லேசிடேரா, அரசு செயலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.