வரும் 25 முதல் அரசு பள்ளிகளில் நீட் தேர்வு சிறப்பு வகுப்பு
திருப்பூர்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்தவுடன், வரும், 25ம் தேதி முதல், நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.மார்ச் 1ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு, 22ம் தேதி வரை நடக்கிறது.பொதுத்தேர்வு முடிந்த கையுடன், மார்ச் 25ம் தேதி முதல் நீட், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளை பிளஸ் 2 மாணவர்களுக்கு துவங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நீட் சிறப்பு பயிற்சிக்கென இணையதளம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை வசதி உள்ள பள்ளிகளில் மையங்களை தேர்வு செய்ய வேண்டும்.ஒரு மையத்துக்கு குறைந்தபட்சம், 40 மாணவர்கள் இருக்க வேண்டும். பயிற்சிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கேற்ப மையங்களை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி நடத்த வேண்டும்.தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும். பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனி வரை, காலை, 9:15 முதல், மாலை, 4:30 மணி வரை செயல்பட வேண்டும்.போக்குவரத்து கட்டணம், காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்&' என்பது உள்ளிட்ட, பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.நடப்பாண்டு, மே, 5ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது.