மாணவர்கள் திறன் திட்டத்தில் பின்தங்கிய கோவை; மீண்டும் ஆய்வு நடத்த உத்தரவு
பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில் 'திறன்' திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவு நிலை குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்படவுள்ளது.அரசு பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுள், அடிப்படை கற்றலில் பின்தங்கியவர்களை மேம்படுத்த 'திறன்' திட்டத்தின் கீழ் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறன்கள் கற்பிக்கப்படுகின்றன. காலாண்டு தேர்வுகளில் பெரும்பான்மையான மாணவர்கள் தேர்ச்சி பெறாததால் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் இத்திட்ட செயல்பாட்டில் கோவை மாவட்டம் பின்தங்கியுள்ளது.மாவட்டத்தில் உள்ள, 15 வட்டாரங்களிலும், 33,299 மாணவர்கள் 'திறன்' திட்டத்தின் கீழ் உள்ளனர். அதிகபட்சமாக பேரூர், சூலூர், கோவை நகர வட்டாரத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் 2,968 பேரும், எஸ்.எஸ். குளத்தில் 2,274, பொள்ளாச்சி தெற்கு 2,234 மாணவர்களும் உள்ளனர்.அரையாண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், இம்மாணவர்களின் கற்றல் அடைவு நிலை மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததும் இதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.