நூலகங்களில் 5 லட்சம் புத்தகங்கள் சேதம்
மழை, வெள்ளத்தால், 100க்கும் மேற்பட்ட நுாலகங்களில், ஐந்து லட்சம் புத்தகங்கள் நாசமாகிவிட்டன. சென்னை மாவட்ட நுாலகங்களில் முக்கியமான ஒன்றான, அசோக் நகர் நுாலகத்தில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள், கணினி, புத்தகப் பதிவேடுகள், ஆவணங்கள், நகல் எடுப்பு இயந்திரங்கள் ஆகியவை வெள்ளத்தால் நாசமாகி உள்ளன. இதேபோல், மேற்கு மாம்பலம் புதுத் தெரு, ஜாபர்கான் பேட்டை, ராகவ ரெட்டி தெரு, மேற்கு சி.ஐ.டி., நகர், ஆயிரம் விளக்கு கொச்சின் இல்லம், போலீஸ் குடியிருப்பு நுாலகம் உட்பட, 10க்கும் மேற்பட்ட பொது நுாலகங்களில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் நீரில் நனைந்து நாசமடைந்துள்ளன. பொது நுாலகத்துறை தவிர, கிராம மறுமலர்ச்சி திட்ட நுாலகங்களிலும் புத்தகங்கள் நாசமாகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில், சின்ன சேக்காடு, அத்திப்பட்டு, மணலி புதுநகர், பாடியநல்லுார் செங்குன்றம், கத்திவாக்கம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரப்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், முடிச்சூர், மண்ணிவாக்கம், மணிமங்கலம், கீழ்க்கட்டளை முசரவாக்கம், கோவூர் உள்ளிட்ட இடங்களிலும் புத்தகங்கள் சேதமாகி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. வெள்ளம் பாதித்த நுாலகங்களை சீரமைப்பதற்கான நன்கொடையாளர்களை, நுாலகத் துறை எதிர்பார்க்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ.,வும், எழுத்தாளருமான மணற்கேணி பதிப்பக உரிமையாளர் ரவிக்குமார் மற்றும் நடிகர் சூர்யாவின், அகரம் அறக்கட்டளை, நுாலகங்களை தத்தெடுக்க முன்வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். சென்னை, எழும்பூர் அருங்காட்சிய வளாகத்திலுள்ள கன்னிமாரா நுாலகத்தை சுற்றி, 4 அடி உயரத்திற்கு கூவம் வெள்ளம் சூழ்ந்தது. ஆனால், பல தடுப்புகளை தாண்டி, அரை அடி அளவுக்கே புத்தகம் இருக்கும் பகுதியில் வெள்ளம் புகுந்ததால், நுாலகம் இயல்புநிலைக்கு வந்துள்ளது. அங்குள்ள அரிய புத்தகங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.