நாட்டில் 53 கோடி கால்நடைகள்; முன்பை விட 4.6 சதவீதம் அதிகரிப்பு
சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 23வது பட்டமளிப்பு விழா, சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரியில் நடந்தது.தமிழக கவர்னரும், பல்கலையின் வேந்தருமான ரவி, 955 மாணவர்களுக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கினார். மொத்தம், 1,166 மாணவர்கள் பட்டம் பெற்ற நிலையில், மீதமுள்ளவர்கள் அந்தந்த கல்லுாரிகளிலேயே பட்டங்களை பெற்றனர்.இதில், சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவர் விஷ்ணு, 13 பதக்கங்களும், ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லுாரி பிரதீப், 9 பதங்களையும் பெற்றனர்.நிகழ்ச்சியில், தேசிய வேளாண் ஆராய்ச்சி கழக துணை தலைமை இயக்குனர் ராகவேந்திர பட்டா பேசியதாவது:இந்தியாவில் கால்நடை துறை, வளர்ந்து வரும் மக்கள் தொகையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதோடு, வாழ்வாதாரம் மற்றும் நிலையான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஆதாரமாக உள்ளது.கிராமப்புறங்களில் கால்நடைகள் வாயிலாக, 14 சதவீதம், வருவாய் பங்களிப்பு உள்ளது. அதேபோல், சிறிய விவசாய குடும்பங்களில், 16 சதவீத வருவாய், கால்நடைகள் வாயிலாக கிடைக்கின்றன. இந்தியாவில், 8.8 சதவீதம் பேருக்கு, கால்நடைகள் வாயிலாக வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.இந்தியாவில் கிட்டத்தட்ட, 30.3 கோடி மாடுகள்; 7.4 கோடி செம்மறி ஆடுகள்; 15 கோடி ஆடுகள்; 90 லட்சம் பன்றிகள்; 85 கோடி கோழிகள் உட்பட, 53.6 கோடி கால்நடைகள் உள்ளன. இவை, முந்தைய கணக்கெடுப்பை விட, 4.6 சதவீதம் அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.பட்டமளிப்பு விழாவில், கால்நடை துறை அமைச்சரும், பல்கலையின் இணை வேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், பல்கலை துணைவேந்தர் செல்வகுமாருக்கு, சமீபத்தில் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.இதில், அமைச்சருக்கு உடன்பாடில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பல்கலையின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.