10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அரசு பொது தேர்வையொட்டி சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் சரயு நேற்று குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி அரசு பள்ளிகளில் ஆய்வு செய்த பின் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், காலை, மாலை நேரங்களில், 1:00 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. 166 அரசு உயர்நிலைப்பள்ளிகளில், பத்தாம் வகுப்பு படிக்கும், 19,966 மாணவ, மாணவிகள், 107 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு பயிலும், 12,561 பேர் என மொத்தம், 32,527 மாணவ, மாணவிகளுக்கு அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் ஓசூர், தளி போன்ற பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட பாடதிட்டங்களுக்கு ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதை பயன்படுத்தி தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.