உள்ளூர் செய்திகள்

16 ஆண்டுகளாக விடிவு இல்லை; போராட்டம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் முடிவு

மதுரை: தமிழகத்தில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 16 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் பயனில்லை. இதைக் கண்டித்து செப்டம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:தமிழக தொடக்கக் கல்வியில் 1.6.2009க்கு முன், பின் என ஒரு நாள் வித்தியாசத்தில் ஒரே கல்வித் தகுதியில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.3170 வித்தியாசத்தில் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.ஒரே பணி, ஒரே கல்வியாக இருந்தும் சம வேலைக்கு சம ஊதியம் இல்லாதது உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானது. இப்பிரச்னையை களைய கோரி 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர் போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த எங்கள் போராட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து, 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 311வது வாக்குறுதியாக சம வேலைக்கு சமஊதியம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. தற்போது வரை நடவடிக்கை இல்லை.2023ல் நடந்த போராட்டத்தால் இப்பிரச்னைக்கு தீர்வுகாண 3 நபர் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். அக்குழு விரைவாக செயல்பட்டு அறிக்கை வழங்கும் நடவடிக்கையே இல்லை. 2009ல் நியமனமான ஆசிரியர்களில் பலர் எவ்வித பயனுமின்றி ஓய்வு பெறுகின்றனர்.இதைக் கண்டித்து ஜூலை 19ல் மாவட்ட அளவில் உண்ணாவிரதம் நடைபெறும். அதிலும் முன்னேற்றம் இல்லையென்றால் செப்டம்பரில் கோரிக்கை நிறைவேறும் வரை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டம் வலுவானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்