உள்ளூர் செய்திகள்

28 ஆண்டு போராட்டத்துக்கு பின் வி.ஏ.ஓ., தேர்வு எழுத வாய்ப்பு

கோவை: இருபத்தெட்டு ஆண்டு போராட்டத்துக்குப் பின், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு எழுத, தமிழகத்தில் 1,200 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில், கிராமங்களை நிர்வகிக்க மணியக்காரர் (வில்லேஜ் முன்சீப்), கணக்குப்பிள்ளை (கர்ணம்) என்ற இரு பொறுப்புகள் மட்டுமே இருந்தன. தமிழக அரசு நடத்தும் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தப் பொறுப்புக்கு வர முடியும். கடந்த 1979ம் ஆண்டு நவ., 14ம் தேதி, தமிழக அரசு இந்த இரு பொறுப்புகளையும் கலைத்தது. அப்போது, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே வி.ஏ.ஓ.,வாக தேர்வு செய்யப்பட்டனர். இரு பொறுப்புகளும் திடீரென கலைக்கப்பட்டதால், ஏற்கனவே மணியக்காரர் மற்றும் கணக்குப்பிள்ளை தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். தங்களையும் வி.ஏ.ஓ.,வாக பணியில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. கடந்த 28 ஆண்டுகளாக போராடி வரும் இவர்களுக்கு, வி.ஏ.ஓ., தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆறு மையங்களில் 1,200 பேருக்கு அக்., 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வி.ஏ.ஓ., பணியிடத்துக்கான தேர்வில் கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 23 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்